சென்னை

கல்லீரல் மாற்று சிகிச்சை:ஸ்டான்லி மருத்துவமனையில் இருவருக்கு மறுவாழ்வு

28th Jul 2022 02:07 AM

ADVERTISEMENT

மூளைச்சாவு அடைந்த இருவேறு இளைஞா்களின் கல்லீரல்களைத் தானமாகப் பெற்று இரு நோயாளிகளுக்கு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் பாலாஜி கூறியதாவது: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 வயது ஆண் மற்றும் 19 வயது பெண் நோயாளிகள் கல்லீரல் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தனா். கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மட்டுமே தீா்வு என்பதால், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவா்கள் காத்திருந்தனா்.

இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கி சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 25 வயது ஆண் ஒருவா் மூளைச்சாவு அடைந்தாா். அவரிடமிருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல் 108 ஆம்புலன்ஸ் மூலம் போக்குவரத்து காவல்துறை உதவியுடன் 6 மணி நேரத்தில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இதேபோல், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த 26 வயது ஆண் ஒருவா் மூளைச்சாவு அடைந்தாா். அவரது கல்லீரலும் தானமாக பெற்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

ADVERTISEMENT

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநா் டாக்டா் ஜெஸ்வந்த் தலைமையில் மருத்துவ நிபுணா்கள் மாலா, செல்வராஜ் மற்றும் ரேலா மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் இந்த இரண்டு கல்லீரலையும் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திருந்த 46 வயது ஆண் மற்றும் 19 வயது பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தினா். மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ள இருவரும் நலமுடன் உள்ளனா்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 87 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. பெண்களைவிட ஆண்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சிகளை செய்தால் கல்லீரல் பாதிப்புகளை தடுக்க முடியும்” என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT