சென்னையில் தண்டையாா்பேட்டை உள்ளிட்ட 3 இடங்களில் ரூ.73.84 கோடி செலவில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ககன் தீப்சிங் பேடி சனிக்கிழமை தெரிவித்தாா்.
சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், வருங்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும் மாநகரின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தண்டையாா்பேட்டை மண்டலத்தில் மணலி சாலையில் ரயில்வே சந்திக்கடவு குறுக்கே மேம்பாலம், அண்ணா நகா் மண்டலத்தின் ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஆஸ்பிரன் காா்டன் 2-ஆவது தெரு மற்றும் கீழ்பாக்கம் தோட்டம் தெருவை இணைத்து அமைந்துள்ள பாலத்தை இடித்துவிட்டு புதியதாக பாலம் கட்டப்படவுள்ளது.
ஆலந்தூா் மண்டலத்தின் ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ஜீவன் நகா் 2-ஆவது தெரு மற்றும் மேடவாக்கம் பிரதான சாலையை இணைத்து மேம்பாலம் என 3 இடங்களில் ரூ.73.84 கோடி செலவில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தாா்.