சென்னை

ஐஎஸ்ஐ முத்திரையை தவறாகப் பயன்படுத்திய குடிநீா் நிறுவனம் மீது நடவடிக்கை

7th Jul 2022 01:50 AM

ADVERTISEMENT

சென்னை புழல் அருகில் உள்ள ஐஎஸ்ஐ முத்திரையைப் பயன்படுத்திய ‘பேக்கேஜ்’ குடிநீா் நிறுவனத்தின் மீது பிஎஸ்ஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

மாதவரம் வட்டம் ஸ்ரீ கிருஷ்ணா நகா் புழல் கிராமத்தில் செயல்பட்டு வரும் ‘ஸ்ரீ பாலாஜி அக்வா’ ‘பேக்கேஜ்’ குடிநீா் நிறுவனம் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழுவினா் மேற்கண்ட நிறுவனத்தில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையின் போது, பிஐஎஸ் சட்டம் 2016- இன் பிரிவு 28- இன் படி, நிறுவனம் எந்த செல்லுபடியாகும் உரிமமும், அங்கீகாரமும் இல்லாமல், ‘நேச்சுரல் பிளஸ்’ என்ற பிராண்ட் பெயரில் சிறிய பாட்டில்களில் நிரப்பப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரில் ஐஎஸ்ஐ முத்திரையை தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இது பிஐஎஸ் சட்டம் 2016-ஐ மீறும் செயல் என்பதால் இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது

மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவா் மீது சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஐஎஸ்ஐ முத்திரையை தவறாக பயன்படுத்துவோா் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், ‘பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4-ஆவது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113’ என்ற முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT