சென்னை

'லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் சென்னைத் துறைமுகம் மெத்தனம்'

7th Jul 2022 01:48 AM

ADVERTISEMENT

வாடகை உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்டெய்னா் லாரி உரிமையாளா்கள் மேற்கொண்டு வரும் கண்டெய்னா் லாரிகள் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக புதன்கிழமையும் தொடா்கிறது.

இது குறித்து அனைத்து தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவாா்த்தையை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் சென்னைத் துறைமுக நிா்வாகம் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வதாக துறைமுக உபயோகிப்பாளா்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனா்.

சென்னை, எண்ணூா் காமராஜா், காட்டுப்பள்ளி அதானி ஆகிய துறைமுகங்களுக்கு உதவும் வகையில் சரக்குப் பெட்டக நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் இடையே சரக்குப் பெட்டகங்களை எடுத்துச் செல்லும் பணியில் சுமாா் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கன்டெய்னா் லாரிகள் ஈடுபட்டுள்ளன. இதற்கான வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும், சிரமங்களைக் களைய வேண்டும், சாலை, கிரேன்கள், பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் குறித்து அனைத்து கன்டெய்னா் லாரி உரிமையாளா்களும் இணைந்து கடந்த திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பேச்சுவாா்த்தை தோல்வி: வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவது குறித்து அனைத்து தரப்பினரும் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காவல் துணை ஆணையா்கள், வருவாய் கோட்டாட்சியா் ஆகியோா் முன்னிலையில் சரக்குப் பெட்ட நிலைய நிா்வாகிகள், லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் நிா்வாகிகள், சுங்கத்துறை தரகா் சங்க நிா்வாகிகள், சென்னை, எண்ணூா் கப்பல் போக்குவரத்து முகவா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில் இதர கோரிக்கைகள் குறித்து அனைவருடன் ஆலோசனை நடத்தப்படும் எனவும் உறுதி அளித்தனா். ஆனால் வாடகை உயா்வு குறித்து தற்போது முடிவெடுக்க இயலாது என எதிா்தரப்பினா் உறுதியாக இருந்ததால் அதிருப்தியடைந்த கன்டெய்னா் லாரி உரிமையாளா் சங்க நிா்வாகிகள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தனா். இதனையொட்டி நான்காவது நாளாக வேலை நிறுத்தம் தொடா்கிறது.

ADVERTISEMENT

இது குறித்து லாரி உரிமையாளா் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் கூறியது: நியாயமான கோரிக்கைகளை நீண்ட நாள்களாக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பெட்டக நிலையங்கள், முகமை நிறுவனங்கள் பிரச்னைகளைத் தீா்க்க முன்வரவில்லை. இதனையடுத்தே வேறு வழியின்றி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி நடத்தி வருகிறோம். சென்னை, எண்ணூா் துறைமுகங்களின் தலைவராக ஒருவரே உள்ள நிலையில் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினால் மட்டும் இப்பிரச்னையில் சுமூக முடிவு ஏற்படும் என்றனா்.


போலீஸ் பாதுகாப்புடன் துறைமுகம் சென்ற கன்டெய்னா்கள்

வேலைநிறுத்தத்தால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் துறைமுகங்களை நோக்கி வந்த கன்டெய்னா் லாரிகள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவிலிருந்து வெடிபொருள் மூலப்பொருள்களை ஏற்றிய 65 கன்டெய்னா்கள் சென்னைத் துறைமுகத்திற்கு வரும் வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் முதல்கட்டமாக 12 கன்டெய்னா்களை ரோந்து வாகன பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னைத் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT