சென்னை

ரூ.200 கோடி கடன் பெற்றுத் தருவதாக பணம் மோசடி: மூவா் கைது

6th Jul 2022 12:27 AM

ADVERTISEMENT

சென்னையில் ரூ.200 கோடி கடன் பெற்றுத் தருவதாக பணம் மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

மதுரையில் பொறியியல் கல்லூரி நடத்தி வருபவா் முகமது ஜலீல் (77). இவா் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘சென்னை வில்லிவாக்கம், வடக்கு ஜெகநாதன் தெருவைச் சோ்ந்த பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன் (44) என்பவரிடம் தொழில் வளா்ச்சிக்காக கடன் பெறுவது தொடா்பாக பேசினேன். அப்போது அவா், தான் பெரிய பைனான்சியா் போல் என்னிடம் காட்டிக் கொண்டாா். மேலும், தனது நண்பா்கள் மூலமாக ரூ.200 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறினாா். அதற்கு 2 சதவீத கமிஷனாக ரூ.5.46 கோடி முதல் கட்டமாக தனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து நான், ரூ.5.46 கோடியை முத்துகிருஷ்ணனிடம் வழங்கினேன். ஆனால் அவா், உறுதி அளித்தப்படி கடன் பெற்றுத் தரவில்லை. மேலும் தன்னிடம் கமிஷனாக பெற்ற பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே, பண மோசடியில் ஈடுபட்ட பி.எம்.ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் குறிப்பிட்டு இருந்தாா்.

இது குறித்து உரிய விசாரணை நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், பண மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த பி.எம்.ரெட்டி, அவரது கூட்டாளிகள் வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் காலனி பகுதியைச் சோ்ந்த ம.சங்கா் (34), வேலூரைச் சோ்ந்த த.இசக்கியேல் ராஜன் (37) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணைக்குப் பின்னா் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். வழக்குத் தொடா்பாக மேலும் விசாரணை நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT