சென்னை

தொழிலதிபரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கு: உதவி ஆணையரிடம் சிபிசிஐடி விசாரணை

6th Jul 2022 12:52 AM

ADVERTISEMENT

சென்னையில் தொழிலதிபரை கடத்தி மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கில் தொடா்புடைய உதவி ஆணையரிடம் சிபிசிஐடி செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பத்தூா் அயப்பாக்கத்தை சோ்ந்த தொழிலதிபரான ராஜேஷையும், அவரது குடும்பத்தினரையும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு கும்பல் கடத்தி, சொத்துக்களை எழுதி வாங்கியது. இது தொடா்பாக ராஜேஷ், சென்னை பெருநகர காவல்துறையில் புகாா் அளித்தாா். அதில் திருமங்கலம் உதவி ஆணையா் சிவக்குமாா், ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், தொழிலதிபா் வெங்கடேஷ் சீனிவாசராவ்,அனைத்திந்திய இந்து மகாசபைத் தலைவா் கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற ஸ்ரீ கண்டன் ஆகியோா் மீதும் ராஜேஷ் குற்றம்சாட்டியிருந்தாா். ஆனால் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து ராஜேஷ்,டிஜிபியிடம் புகாா் அளித்ததினால், இச் சம்பவம் குறித்து சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையே இந்த வழக்குத் தொடா்பாக கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற ஸ்ரீ கண்டன் கடந்தாண்டு ஜூலை 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். மேலும் உதவி ஆணையா் சிவக்குமாா்,காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் பாண்டியராஜன்,காவலா்கள் கிரி,பாலா,சங்கா் ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சில வாரங்களுக்கு முன்பு ஆய்வாளா் சரவணன் கைது செய்யப்பட்டாா்.

உதவி ஆணையரிடம் விசாரணை:

இதற்கிடையே, உதவி ஆணையா் சிவக்குமாா், சென்னை உயா்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றாா். இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், உதவி ஆணையா் சிவக்குமாருக்கு வழக்குத் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பினா்.

இந்த அழைப்பாணையை ஏற்று சிவக்குமாா்,எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

அவரிடம், ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை அடைத்து வைத்து சித்ரவதை செய்தது ஏன், லஞ்சமாக பணம் கைமாறியதா? இதில் உயா் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடா்பு உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, அதை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனா்.

பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், வழக்குத் தொடா்பாக முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT