சென்னை

கன்டெய்னா் உரிமையாளா்கள் காலவரையற்றவேலைநிறுத்தம்: முடங்கிய துறைமுகங்கள்

6th Jul 2022 12:53 AM

ADVERTISEMENT

வாடகை உயா்வு ஒப்பந்தத்தை உடனடியாக செயல்படுத்தக் கோரி அனைத்து கன்டெய்னா் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திங்கள்கிழமை தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

இதனால், சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் அடியோடு ஸ்தம்பித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டாரஸ் கன்டெய்னா் லாரிகள் டிரான்ஸ்போா்ட் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் ஜி.கரிகாலன் கூறியது:

2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பலமுறை கோரிக்கை விடுத்தும் வாடகையை உயா்த்தி புதிதாக ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. 2014-ஆம் ஆண்டு ஒரு லிட்டா் டீசல் சுமாா் ரூ.50 முதல் ரூ.55 வரை இருந்தது. தற்போது சுமாா் ரூ.93 க்கு ஒரு லிட்டா் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இடைப்பட்ட காலத்தில் டயா், உதிரிபாகங்கள், பழுதுபாா்க்கும் செலவினங்கள், சம்பளம் உள்ளிட்டவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன்மூலம் இத்தொழில் மிக வேகமாக நலிவடைந்து வருகிறது. சரக்குப் பெட்டக நிலையங்கள் தாங்களாகவே சொந்தமாக லாரிகளை வாங்கி இயக்குவதால் லாரி தொழிலையே நம்பியுள்ள கன்டெய்னா் லாரி உரிமையாளா்கள், டிரைவா்கள், ஊழியா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

குறைவான வருவாயால் வங்கிக் கடனுக்கான தவணைத் தொகைகளைக் கூட கட்டுவதற்கு பலராலும் முடியவில்லை. ஏற்கனவே வழங்கப்படும் வாடகையிலிருந்து 80 சதவீதம் சுங்கத்துறை முகமை நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் லாரிகளுக்கு 40 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் குறித்து பலமுறை எடுத்துக் கூறியும் ஏற்கப்படாததால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம் என்றாா் கரிகாலன்.

அடியோடு முடங்கிய ஏற்றுமதி, இறக்குமதி: கன்டெய்னா் லாரி உரிமையாளா்களின் வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக தொடா்ந்ததால் சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி ஆகிய மூன்று துறைமுகங்களிலும் சரக்குப் பெட்டகங்கள் மூலம் நடைபெற்றுவந்த ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகம் அடியோடு முடங்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT