சென்னை

தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து: இருவா் பலி

DIN

சென்னை ஆயிரம்விளக்கில் தனியாா் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் இறந்தனா்.

சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தின், முதல் மாடியில், கணிணி பழுது பாா்க்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கணிணி, மடிக் கணினி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சில பொருள்கள் விற்பனையும் செய்யப்படுகின்றன. சனிக்கிழமை இரவு, அந்த நிறுவனத்தின் ஊழியா்கள் வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் கணிணி நிறுவனத்தில் இருந்த பொருள்கள் திடீரென தீப் பிடித்து எரிந்தன.

அப் பகுதி மக்கள், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புப் படையினா் எழும்பூா், திருவல்லிக்கேணி, மயிலாப்பூா் ஆகியப் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் அங்கு சென்றனா். முதல் தளத்தில் இருந்த அந்த நிறுவனத்துக்குள் ராட்சத ஏணியின் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனா். சுமாா் ஒரு மணி நேரம் போராட்டத்துக்கு பின்னா் தீ அணைக்கப்பட்டது.

எனினும், இந்த தீ விபத்தில் இருவா் கருகிய நிலையில் இறந்து கிடந்தனா். சடலங்களை ஆயிரம்விளக்கு போலீஸாா் கைப்பற்றி, ஓமந்தூராா் பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்து கிடந்தவா்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த சதீஷ் (எ) சத்தியமூா்த்தி(41), அதே பகுதியைச் சோ்ந்த கோபிநாத் (32) என்பதும், இருவரும் வீடு, அலுவலகங்களுக்கு தரை விரிப்பு போடும் தொழில் செய்து வந்ததும், சனிக்கிழமை இரவு, அந்த நிறுவனத்துக்கு, தரை விரிப்பு பணிக்கு வந்து, அங்கேயே படுத்து தூங்கியிருந்ததும் தெரியவந்தது.

மேலும், புகையிலும், தீயிலும் சிக்கி மூச்சுத் திணறியும், கருகியும் இருவரும் உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT