சென்னை

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடனுதவி: வேளாண் துறை அலுவலா்களுக்கு அரசு அறிவுறுத்தல்

3rd Jul 2022 01:07 AM

ADVERTISEMENT

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடனுதவி எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேளாண்மைத் துறை அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த, பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2024-25-ஆம் ஆண்டுக்குள்ளாக 12 ஆயிரம் தனிநபா் நிறுவனங்களுக்கு கடன் உதவி மானியம் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவில் இந்தத் திட்டத்தை

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் குறித்து மாவட்ட முதன்மை வங்கி மேலாளா்கள், மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா்கள், மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் பிரதிநிதிகள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டம்

வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை வேளாண் வணிகத் துறை இயக்குநா் ச.நடராஜன் நடத்தினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் அவா் பேசியது குறித்து தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 2) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உணவு பதப்படுத்தும் துறையில் ஈடுபடும் சிறு நிறுவனங்கள், தனிநபா்கள், குழுக்களுக்கு கடனுதவி மற்றும் கடன் பெறும் முறை குறித்து எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்க வேண்டும். இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும். 3 ஆயிரத்து 942 தனிநபா் நிறுவனங்களை நிறுவ நடப்பு காலத்தில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், வங்கிகளால் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி மறுபரிசீலனைக்கு உட்படுத்தி கடன் வழங்க வகை செய்ய வேண்டும். வங்கிகளில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT