சென்னை

பண்ணாரி - திம்பம் சாலையில் இரவில் வாகனங்களுக்கு தடை: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்குப் பரிந்துரை

DIN


சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சாலை விபத்துகளால் வனவிலங்குகள் இறப்பதைத் தடுக்கும் வகையில் பெங்களூரு-கோவை தேசிய நெடுஞ்சாலையின் (என்ஹெச்958) பண்ணாரி-திம்பம் சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்வதைத் தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்(நகாய்) சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது, தற்செயல் மரணத்தைத் தடுப்பது தொடா்பான ஏராளமான பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கடந்த பத்து ஆண்டுகளில்(2012-2021) சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக கா்நாடகத்தின் பெங்களூரு மற்றும் தமிழகத்தின் கோயம்புத்தூா் ஆகியவற்றை இணைக்கும் என்ஹெச்-958 இல் மூன்று சிறுத்தைகள் உட்பட 152 வன விலங்குகள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக எண்ணிக்கையில் கனரக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் செல்வதாகவும், அந்த வாகன ஓட்டுநா்கள் வேக வரம்புகளைக் கடைப்பிடிக்காததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தெங்குமரஹாடா, பண்ணாரி பிரதான சாலை இடையேயான சாலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் மையப் பகுதியில் செல்கிறது. மேலும் 30 சதவீதம் புலிகள் அந்தப் பகுதியில் வசிக்கின்றன. இப்பகுதி புலி, பிற வனவிலங்குகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் உள்ளது.

எனவே அந்தப் பகுதியில் அங்குள்ள வன விலங்குகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும். ஆனால், அங்கு அமைந்திருக்கும் கிராமம், வனவிலங்குகளின் சுதந்திரமான நடமாட்டத்தைப் பாதிக்கிறது. ஆகையால், அந்தக் கிராமத்தில் உள்ள மக்களை வெளியேற்றினால், அப்பகுதி வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாட வசதியாக இருக்கும்.

வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று இடத்தில் மறுவாழ்வு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு கண்டறிய வேண்டும்.

சாலை விபத்துகளால் வனவிலங்குகள் இறப்பதைத் தடுக்கும் வகையில் பெங்களூரு-கோவை தேசிய நெடுஞ்சாலையின்(என்ஹெச்958) பண்ணாரி-திம்பம் சாலையில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்வதைத் தடை செய்வது குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (நகாய்) பரிசீலிக்க வேண்டும்.

வழக்கின் அடுத்த விசாரணையின்போது, தேசிய நெடுஞ்சாலை உயா் அதிகாரி, தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளா், நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்ட ஆட்சியா்கள் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT