சென்னை

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

25th Jan 2022 06:31 AM

ADVERTISEMENT

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்களின் மின் இணைப்பைத் துண்டிக்குமாறு அறிவுறுத்திய சென்னை உயா் நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை (ஜன.28) அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்த பெத்தேல் நகரிலுள்ள வணிக, குடியிருப்பு சாா்ந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு, கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, ஐ.ஹெச்.சேகா் என்பவா் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை(ஜன.24) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்குள்ளான அதிகாரிகள், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜராகியிருந்தனா்.

ADVERTISEMENT

அப்போது சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சம்பந்தமாக ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், கடந்த 2015-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததோடு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பதால்தான் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன.

ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டுமானங்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜன.28) வரை அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனா்.

மேலும் அன்றைய தினமும் நீதிமன்ற அவமதிப்பு புகாருக்குள்ளான அதிகாரிகள் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT