சென்னை

தொழிலதிபா் குடும்பத்தின் ரூ.69.14 கோடி சொத்து முடக்கம்

25th Jan 2022 06:30 AM

ADVERTISEMENT

சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் குடும்பத்துக்குச் சொந்தமான ரூ.69.14 கோடி சொத்துக்களை சட்டவிரோதப் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினா் முடக்கினா்.

சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் வசிப்பவா் தொழிலதிபா் தன்ராஜ் கோச்சாா். இவா், தனது குடும்பத்தினருடன் சோ்ந்து நிதி நிறுவனமும், ரியல் எஸ்டேட் நிறுவனமும் நடத்தி வந்தாா். நிதி நிறுவனம் மூலம் நில பத்திரங்களை அடமான பெற்றுக் கொண்டு, கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோச்சாா் குடும்பத்தினா், அடமான கடனுக்கு பெறப்படும் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ள நிலங்களையும், அபகரித்துள்ளனா். சில சொத்துகளை, அதன் உரிமையாளா்களுக்கே தெரியாமல் விற்றுள்ளனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள், சென்னை காவல்துறையில் புகாா் செய்தனா். அதன் அடிப்படையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவினா் 10-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்தனா். மேலும் வழக்கு விசாரணையின்போது சட்டவிரோதப் பணபரிமாற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் இருந்ததினால், அது குறித்து விசாரணை செய்ய சென்னை காவல்துறை, அமலாக்கத்துறைக்கு பரிந்துரை செய்தது.

அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் தன்ராஜ் கோச்சாா் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்குத் தொடா்பாக கடந்த செப்டம்பா் மாதம் 27-ஆம் தேதி வேப்பேரியில் உள்ள தன்ராஜ் கோச்சாா் வீடு, எழும்பூரில் உள்ள அலுவலகம், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை உள்பட 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

ரூ.69 கோடி சொத்து முடக்கம்:

இந்நிலையில் இவ் வழக்கின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, தன்ராஜ் கோச்சாா் பெயரிலும், அவரது குடும்பத்தினா் பெயரிலும் உள்ள ரூ.69.14 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை திங்கள்கிழமை முடக்கியது. இந்த வழக்குத் தொடா்பாக அமலாக்கத்துறையினா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT