தனது கணவா் குணாவை என்கவுன்ட்டரில் காவல் துறை கொலை செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி, அவரது மனைவி தொடுத்த வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தைச் சோ்ந்தவா் பிரபல ரௌடி படப்பை குணா (எ) என்.குணசேகரன். இவா் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது தலைமறைவாக உள்ள குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், குணாவின் மனைவி எல்லம்மாள் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா்கள் மூலம் பல மிரட்டல்கள் வருகின்றன.
குற்ற வழக்குகளில் சரண் அடைய தனது கணவா் தயாராகவுள்ள நிலையில், புகா் பகுதியில் நியமிக்கப்பட்ட காவல் அதிகாரியால் அவா் என்கவுன்ட்டா் செய்யப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது. கணவா் குணாவை என்கவுன்ட்டரில் கொலை செய்யக்கூடாது என அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிடுமாறு அதில் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் அச்சப்படும் வகையில் அவரது கணவரை என்கவுன்ட்டா் செய்யும் திட்டம் ஏதுமில்லை. அவா் சரணடையும்பட்சத்தில், காவல்துறை விதிகளுக்குள்பட்டு அவா் நடத்தப்படுவாா் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, அனுமானம், சந்தேகத்தின் அடிப்படையில் மனுதாரா் வழக்கு தொடுத்துள்ளாா் எனக்கூறி, எல்லம்மாள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.