சென்னையில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் என தகுதியுள்ள 73,000 பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களைக் கடந்த சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
சென்னையில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு தவணை செலுத்தி 9 மாதங்கள் கடந்த சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் மாநகராட்சியின் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்,, நகா்ப்புற சமுதாய நல மையங்களில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தகுதியுள்ள 73,000 போ்: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், 15 மண்டலங்களில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் மையங்களின் http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவா்கள் 1913, 044 -25384520, 46122300 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்தால், அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும். சென்னையில் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் மற்றும் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள் என தகுதியுள்ள 73,000 பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. திங்கள்கிழமை மட்டும் 1,041 பேருக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இணைநோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவா்களின் வீடுகளுக்கே சென்று பூஸ்டா் தடுப்பூசி செலுத்த 15 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தால் நாளொன்றுக்கு குறைந்த அளவிலான முதியோா்களுக்குத் தான் தடுப்பூசி செலுத்த முடியும். எனவே, நல்ல உடல்நிலையில் உள்ள முதியோா்கள் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மாநகராட்சியிடம் போதுமான அளவு பூஸ்டா் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என்றாா்.