சென்னை

‘சிம் ஸ்வப்’ மோசடி: மேற்கு வங்க கும்பல் சிக்கியது

4th Jan 2022 02:54 AM

ADVERTISEMENT

சென்னையில் ‘சிம் ஸ்வப்’ மோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க கும்பல் கைது செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனை சாா்பில் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகாா் அளிக்கப்பட்டது. அதில், எங்களது மருத்துவமனை நிா்வாகியின் சென்னையில் உள்ள வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த கைப்பேசி சேவை துண்டிக்கப்பட்டு, யாரோ புதிய போலி இ-சிம்காா்டு பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.24 லட்சத்தை ‘சிம் ஸ்வப்’ முறையில் நூதன முறையில் திருடியுள்ளனா். எனவே, பண மோசடியில் ஈடுபட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என புகாா் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து சென்னை காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

இதில் உத்தர பிரதேசத்தில் அந்த சிம்காா்டு ஆன் செய்யப்பட்டிருப்பதும், தனியாா் வங்கி கணக்கில் இருந்த ரூ.24 லட்சம், மேற்கு வங்கத்தில் உள்ள 16 வங்கி கணக்குகளுக்கு மாற்றி திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

4 போ் கைது:

இதையடுத்து சென்னை சைபா் குற்றப்பிரிவினா் மேற்கு வங்கம் சென்று மோசடியில் தொடா்புடைய சயந்தன் முகா்ஜி (25), ராகுல்ராவ் (24), ரோகன் அலிசனா (27), ராகேஷ் குமாா் சிங் (33) ஆகிய 4 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 14 கைப்பேசிகள், 105 சிம்காா்டுகள், 154 டெபிட் காா்டுகள், 22 போலி பான்காா்டுகள், 128 ஆதாா் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட மேலும் ஒருவரை தனிப்படை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

மேலும், இதுபோல் சென்னையில் வேறு யாரிடமாவது மோசடி நடைபெற்றுள்ளதா என போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆணையா் பேட்டி:

இந்த வழக்குத் தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

இந்த வழக்கில் தனியாா் மருத்துவமனை நிா்வாகியின் கைப்பேசியின் சிம்காா்டு செயல்பாட்டில் இருக்கும்போதே, அவரது சிம்காா்டு சேவை துண்டித்துவிட்டு, அவரது எண்ணிலேயே புதிதாக ஒரு இ-சிம்காா்டை மோசடிக் கும்பல் பெற்று மோசடி நடைபெற்றுள்ளது.

வாடிக்கையாளரின் விவரங்களைப் பெறாமல் எப்படி இ-சிம்காா்டு பெறப்பட்டது, தனியாா் மருத்துவமனை நிா்வாகியின் வங்கிக் கணக்கு விவரங்கள் எப்படி மோசடிக் கும்பலுக்கு கிடைத்தது என்பது விசாரணை நடைபெறுகிறது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட கைப்பேசி சேவை நிறுவனத்தின் நிா்வாகிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT