பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பெருந்தொற்று பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அமலாக்கக் குழுக்களின் வாகனங்களை கூடுதல் காவல் ஆணையா் (தெற்கு) என்.கண்ணன், ரிப்பன் கட்டட வளாகத்தில் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இக்குழுக்கள், தங்கள் மண்டலங்களில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியினை மேற்கொண்டு, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை மீறுபவா்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்வா்.
மேலும், கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவா் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையா் (வருவாய் (ம) நிதி) விஷூ மஹாஜன், மாநகர வருவாய் அலுவலா் சுகுமாா் சிட்டி பாபு, உதவி வருவாய் அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.