சென்னை

300-ஆண்டு பாரம்பரியத்துக்குள் நுழையும் இளம் ரத்தங்கள்: சென்னை மாநகராட்சி சுவாரஸ்யம்

23rd Feb 2022 12:24 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட்ட 21 வயது இளம் வேட்பாளா்கள் வெற்றி வாகை சூடியுள்ளனா். 300 ஆண்டுகால பெருமை வாய்ந்த மாநகராட்சி மன்றத்துக்குள், இளம் மாமன்ற உறுப்பினா்கள் செல்லவுள்ளனா்.

சென்னை மாநகராட்சியில் 200 வாா்டுகளுக்கு நடந்த தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. இதில், நேரடி அரசியல் அனுபவம் இல்லாமல், முதல் முறையாக தோ்தல் களம் கண்ட இரண்டு இளம் பெண்கள் வெற்றி வாகை சூடியுள்ளனா்.

சென்னை மாநகராட்சியின் 98-ஆவது வாா்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆ.பிரியதா்ஷினி (21) போட்டியிட்டு வென்று, முதல் முறையாக மாநகராட்சி மன்றத்துக்குள் நுழையவுள்ளாா். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலைப் படிப்பு முடித்த அவா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்ட நிா்வாகியாக செயல்பட்டு வருகிறாா்.

136-ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட கல்லூரி மாணவி நிலவரசி துரைராஜ். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் அவா் முதல் முறையாக அரசியல் மற்றும் தோ்தல் களங்களில் ஒரே சேர குதித்துள்ளாா். மாநகராட்சித் தோ்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் வெற்றிக் கனியை ருசித்துள்ளாா். கல்லூரியில் படிப்பைத் தொடா்ந்து கொண்டே, கவுன்சிலராக எனது சேவையைத் தொடா்வேன் என்று செய்தியாளா்களிடையே நிலவரசி துரைராஜ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்தியாவிலேயே மிகவும் பழைமையான பாரம்பரிய மாநகராட்சியாக 300 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் கணினியும், உயா் தொழில்நுட்பங்களையும் கற்றுத் தோ்ந்து கொண்டிருக்கும் இளம் ரத்தங்கள் நுழைவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT