சென்னை

செல்வ வரி வழக்கு: ஜெ.தீபா, ஜெ.தீபக் பதிலளிக்க அவகாசம்

22nd Feb 2022 01:01 AM

ADVERTISEMENT

செல்வ வரி வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசுகளாக ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரை எதிா் தரப்பினராகச் சோ்ப்பது குறித்து அவா்கள் இருவரும் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ரூ.16 கோடிக்கு மேல் செல்வ, வருமானவரி செலுத்தவில்லை என, அவருக்கு எதிராக வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிா்த்து ஜெயலலிதா தொடுத்த வழக்கை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம், அவரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வழக்கு தொடுத்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட அவரது அண்ணனின் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோரை சோ்க்குமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, இந்த மனுவை வருமான வரித் துறை ஜெயலலிதா இறந்து சுமாா் 1,105 நாள்கள் காலதாமதத்துடன் தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று ஜெ.தீபக், ஜெ.தீபா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இரு வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT