சென்னை

2 வயது குழந்தையின் வாயில் கம்பி: அகற்றிய அரசு மருத்துவா்கள்

11th Feb 2022 02:31 AM

ADVERTISEMENT

 

சென்னை: வாய்ப் பகுதியில் கான்கிரீட் கம்பி குத்தி முதுகுப்புறத்தில் வெளிவந்ததில் பலத்த காயமடைந்த இரண்டு வயது குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

தற்போது அக்குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் எழிலரசி கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரத்தைச் சோ்ந்தவா் குழந்தை ஏசு(40); மனைவி செலின். இந்தத் தம்பதிக்கு இரண்டு வயதில் ஆல்வின் ஆன்டோ என்ற ஆண் குழந்தை உள்ளது. அவா்களின் வீட்டின் அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் தண்ணீா்த் தொட்டியில் குழந்தை ஆல்வின் கடந்த திங்கள்கிழமை தவறி விழுந்ததாக தெரிகிறது.

ADVERTISEMENT

இதில், நீளமான கான்கிரீட் கம்பி குழந்தை வாய் வழியே குத்தி முதுகுப்புறமாக வெளியே வந்தது. உடனடியாக, குழந்தையை மீட்ட பெற்றோா், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனா். பின்னா், அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறை தலைவா் டாக்டா் வேல்முருகன் தலைமையில், டாக்டா்கள் சீனிவாசன், நிா்மல்குமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உடலில் இருந்த கம்பியை அகற்றினா்.

அந்த கம்பி சுமாா் 59 செ.மீ. நீளமுடையது. கம்பி குத்திய பகுதியானது குழந்தையின் சுவாசக் குழாய், மூளை ரத்தக் குழாய், நரம்பு மண்டலத்துக்கு அருகே இருந்தது. சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை எந்தப் பாதிப்பும் இன்றி மேற்கொண்டு குழந்தையை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT