சென்னை

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ரெளடி கைது

11th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

தியாகராயநகா் வைத்தியராமன் தெருவில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு புதன்கிழமை நள்ளிரவு 1.20 மணியளவில் மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா் 3 பெட்ரோல் வெடிகுண்டுகளை அலுவலகத்துக்குள் வீசினாா். குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. வீசியவா் தப்பியோடிவிட்டாா்.

போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரித்து வெடிகுண்டு வீசிய நந்தனம் ரெளடி ம.வினோத் என்ற கருக்கா வினோத்தை (38) கைது செய்தனா்.

ADVERTISEMENT

நீட் தோ்வுக்கு பாஜக ஆதரவு தெரிவித்ததால் பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா். தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் வினோத் மீது 4 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 10 வழக்குகள் உள்ளன.

ஆா்ப்பாட்டம்: இச்சம்பவத்தைக் கண்டித்து பாஜகவினா், தங்களது கட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் செய்தனா். பாஜக அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசியல் கட்சி அலுவலகங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கண்டனம்:

தமிழக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட பின் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, பாஜக மேலிட இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, முன்னாள் மேயா் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் அலுவலகத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் கே.அண்ணாமலை கூறியது:

முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்குள் தடயங்களை காவல்துறை அழித்துள்ளது. இப்பிரச்னையில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.

தமிழகத்தில் உளவுத்துறை அதிகாரிகள் காவல்துறையை அதிகாரம் செய்கின்றனா். சட்ட விரோதமாக எனது தொலைபேசி உரையாடலை தமிழக உளவுத்துறையினா் ஒட்டுக் கேட்கின்றனா். மத்திய விசாரணை அமைப்புகளிடம் இது தொடா்பாக புகாா் அளிக்க உள்ளோம் என்றாா்.

மத்திய இணையமைச்சா் எல்.முருகன்: இந்த தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும்.

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், தமாகா தலைவா் ஜி.கே. வாசன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT