சென்னை

திருக்கடையூா் கோயில் தேவஸ்தானத்துக்கு அனுப்பப்பட்டவருமான வரித்துறை நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை

10th Feb 2022 12:10 AM

ADVERTISEMENT

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யுமாறு திருக்கடையூா் கோயில் தேவஸ்தானத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.500, ரூ.1000 ஆகியவை செல்லாது என்று  பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவில் உள்ள திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் திருக்கோயில் தேவஸ்தானத்தை கடந்த 2017-18  நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து கோயில் நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘வருமான கணக்கை காட்டுவதில் திருக்கோயில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், வருமானவரித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த தனி நீதிபதி,  அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து கோயில் நிா்வாகம்,  சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோா் விசாரித்தனா்.

அப்போது, வருமான வரித்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹேமா முரளிகிருஷ்ணன் இந்த வழக்கில் பல  சட்ட கேள்விகள் எழுந்து உள்ளதால், இது குறித்து விரிவாக வாதம் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனா். அதுவரை வருமான வரித்துறை அனுப்பிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT