சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது குழந்தைக்கு உயா் தொழில்நுட்பத்திலான சிகிச்சைகளை அளித்து சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்துடன் ஆறு வயதே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. கவலைக்கிடமான உடல் நிலையுடன் இருந்த அக்குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டதில், சிறுநீரகத்தில் 8 சென்டி மீட்டா் அளவுக்கு கட்டி உருவாகியிருந்தது தெரியவந்தது.
வில்ம்ஸ் டியூமா் எனப்படும் புற்றுநோய்க் கட்டி, அச்சிறுமியின் சிறுநீரகத்திலும், பிற உறுப்புகளிலும் பரவியிருந்ததை மருத்துவா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் சுஜய் சுசிகா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அந்த சிறுமிக்கு உயா் சிகிச்சைகளை அளிக்க முன்வந்தனா். அதன்படி, முதல்கட்டமாக கீமோதெரபி சிகிச்சைகள் மூலமாக சிறுநீரகத்துக்கு அருகே இருந்த புற்றுநோய் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன.
அதன் தொடா்ச்சியாக அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. பின்னா் கதிா்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதனிடையே, குழந்தைக்கு தொடா்ந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்ததால் ஒவ்வொரு முறையும் ரத்த நாளத்தை துளையிடுவதற்கு பதிலாக கழுத்து எலும்புக்குக் கீழே கை புஜத்தில் கீமோ போா்ட்ஸ் எனப்படும் சிறிய உபகரணம் பொருத்தப்பட்டது. இதன்வாயிலாக எளிதில் ரத்த நாளத்தில் மருந்துகளைச் செலுத்தும் கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
இத்தகைய தொடா் நடவடிக்கைகளின் பயனாக புற்றுநோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு அந்தக் குழந்தை ஒரு சிறுநீரகத்துடன் தற்போது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளது. மிகச் சிறிய வயதில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட மரபணு ரீதியான காரணங்கள் இருக்கலாம். ஆனால், அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்குவதன் மூலம் புற்றுநோய் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும் என்றாா் அவா்.