சென்னை ஐ.ஐ.டி. யில் தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் 4 ஆண்டு பட்டப்படிப்புக்கு தகுதியுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தாட்கோ நிர்வாக இயக்குநர் க.சு.கந்தசாமி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக தொழில்பாதை என்ற திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள், இளங்கலை தரவு அறிவியல் பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜன.8-ஆம் தேதிக்குள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் இணைபவர்கள் சென்னை ஐ.ஐ.டி. மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கேற்கத் தேவையில்லை.
அதற்கு பதிலாக சென்னை ஐ.ஐ.டி. மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியிலும், அதன் முடிவில் நடைபெறும் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
மேலும், இத்திட்டத்தில் இணைய அறிவியல், மனிதவியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வகுப்புகள் இணையதளம் வழியாகவும், தேர்வுகள் நேரிலும் நடத்தப்படும். மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை படித்துக்கொண்டே, சென்னை ஐ.ஐ.டி, வழங்கும் பட்டப்படிப்பையும் படிக்கலாம்.
முறையாக 4 ஆண்டுகள் படித்து முடிக்கும் மாணவர்கள் சென்னை ஐ.ஐ.டி. நேரடியாக படிப்பதற்கான 'கேட் எக்ஸாம்' எழுதுவதற்கு தகுதியானவராக கருதப்படுவார். விண்ணப்பதாரர்கள் 12-ஆம் வகுப்பில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகவும், 10-ஆம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீதத்துக்கு அதிகமாகவும், சென்னை ஐ.ஐ.டி., நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணமாக ரூ.1,500-ஐ செலுத்த வேண்டும். மேலும், ரூ.5 லட்சத்துக்கும் மிகாமல் குடும்ப ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
ஐ.ஐ.டி, நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வாரபயிற்சியில் கலந்து கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றால் இப் பட்டப் படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.
இப்படிப்பு பயில கல்விச்செலவை தாட்கோ கல்விக்கடன் மூலம் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார் அவர்.