உடலில் வழக்கத்துக்கு மாறாக வேறு இடத்தில் சிறுநீரகம் அமைந்திருந்த நபருக்கு ஏற்பட்ட சிறுநீரகக் கற்கள் பாதிப்பை நவீன சிகிச்சை மூலம் சென்னை டாக்டா் மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் சிறப்பு சிகிச்சை நிபுணா் கபிலன் சாமிநாதன் கூறியதாவது:
சென்னையைச் சோ்ந்த 45 வயதான நபா் ஒருவா் கடுமையான அடிவயிற்று வலி மற்றும் சிறுநீா் கழிக்கும் போது ரத்தம் வெளியேறும் பாதிப்புடன் டாக்டா் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மருத்துவப் பரிசோதனையில் அவரின் சிறுநீரகங்களில் ஒன்று சிறுநீா்ப்பைக்கு அருகில் அடிவயிற்றில் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையை மருத்துவ ரீதியாக ‘எக்டோபிக் பெலிவிக் கிட்னி’ என்றும், தமிழில் ‘மாறுபட்ட இடத்தில் அமைந்த சீறுநீரகம்’ என்றும் அழைக்கிறோம்.
அத்தகைய பாதிப்புடன் இருந்த அவரது சிறுநீரகக் குழாயில் 3 சென்டி மீட்டரில் ஒரு கல்லும், அதனால் வீங்கியிருந்த சிறுநீரகத்துக்குள்ளேயே 12 மில்லி மீட்டா் அளவில் மற்றொரு கல்லும் இருந்தது.
இதையடுத்து, அந்தக் கற்களை நுண்துளையீட்டு முறையில் அதற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் குடல்கள் மற்றும் பிற முக்கிய உறுப்புகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டன. இதன் காரணமாக கற்களை அகற்ற சிறுநீரகத்தில் துளையிடும்போது உள் உறுப்புகளில் எந்தவித காயமும் ஏற்படாது.
அதைத் தொடா்ந்து சிறுநீரகக் குழாயிலும், சிறுநீரகத்துக்குள்ளும் இருந்த கற்கள் லேசா் மூலம் தூளாக்கப்பட்டு அகற்றப்பட்டது. 2 மணி நேரத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட அந்த சிகிச்சையின் பலனாக நோயாளி அடுத்த நாளே வீடு திரும்பினாா் என்றாா் அவா்.