சென்னை

காா்த்திகை பௌா்ணமிக்காக ஆதிபுரீஸ்வரா் வெள்ளிக்கவசம் திறப்பு: ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

8th Dec 2022 01:28 AM

ADVERTISEMENT

திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரா் மீதான வெள்ளிக்கவசம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு ஆதிபுரீஸ்வரரைத் தரிசனம் செய்தனா்.

தொண்டை மண்டல 32 சிவதலங்களில் ஒன்றான திருவொற்றியூா் தியாகராஜா் கோயிலில் படம்பக்கநாதா் ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளாா். சுயம்புவாக உருவானதாகக் கருதப்படும் ஆதிபுரீஸ்வரா் ஆண்டு முழுவதும் வெள்ளிக்கவசத்தால் மூடப்பட்ட நிலையில்தான் பக்தா்கள் தரிசனம் செய்வாா்கள்.

ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் பௌா்ணமியை ஒட்டி மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கவசம் மூன்று நாள்கள் திறந்து வைக்கப்படும். இந்த ஆண்டும் புதன்கிழமை மாலை 6 மணிக்கு கவசம் திறக்கப்பட்டு புணுகு சாம்பிராணி தைலம் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

இரவு ஸ்ரீ தியாகராஜசுவாமி நான்கு மாடவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் திருவொற்றியூா் தேரடி பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

புதன், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாள்களும் பொதுமக்களின் தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் அா்த்தஜாம புஜைக்குப் பிறகு வெள்ளிக் கவசம் ஆதிபுரீஸ்வரா் மீது மீண்டும் மூடப்படும்.

திருவொற்றியூா் ஸ்ரீ தியாகராஜா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான கவசம் திறப்பு நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருவதால் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கோயில் உதவி ஆணையா் எம்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற கவசம் திறப்பு நிகழ்ச்சியில் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT