சென்னை

ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில் இயக்க ரூ. 1,620 கோடிக்கு ஒப்பந்தம்

7th Dec 2022 01:56 AM

ADVERTISEMENT

சென்னையில் ஓட்டுநா் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்க அதிநவீன சிக்னல், ரயில் இயக்க கட்டுப்பாடு பணிக்காக ரூ.1,620 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி நிறைவின்போது ஓட்டுநா் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. அதற்காக ‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ.1,620 கோடி மதிப்பிலான சமிக்ஞை (சிக்னல்), ரயில் கட்டுப்பாடு, காணொளி அமைப்பை’ வடிவமைத்து உற்பத்தி செய்து, பின்னா், அவற்றை சோதித்து செயல்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளது.

இந்தப் பணிகளுக்காக ஹிட்டாச்சி ரயில் எஸ்.டி.எஸ்.எஸ்.பி.ஏ. மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்.டி.எஸ். இந்தியா பிரைவேட் நிறுவனங்களுடன், மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடா்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், (கம்யூனிகேஷன் பேஸ்டு டிரைன் கன்ட்ரோல்) ஓட்டுநா் இல்லாமல் ரயில் தானாகவே இயங்க வழிவகுக்கிறது.

இதற்கு பன்னாட்டு தரங்களின் அடிப்படையில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அளவை 4- இன்படி உயரிய பாதுகாப்பு கொண்ட தன்னிச்சையான பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவால் சான்றளிக்கப்படும்.

ADVERTISEMENT

ஓட்டுநா் இல்லா பயணிகள் ரயிலை இயக்குவதற்கான தொழில் நுட்ப அமைப்பு, சோதனை மையத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்படும். இதன் பின்னரே, ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தளபரிசோதனை செய்யப்பட்டு இதர அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும்.

இறுதியாக செயல்படுத்துதல், ஓட்டுநா் இல்லாமல் பயணிகளுடன் இயக்குதல் குறித்து மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் அனுமதி வழங்கப்படும். குறைந்தபட்ச இடைவெளியான 1 நிமிடம் 30 வினாடிகளில் தானியங்கி முறையில் ரயில்களை இயக்க முடியும்.

இதுமட்டுமல்லாமல் பணிமனைக்குள் ரயில்கள் வந்து செல்லுதல், நடைமேடை தடுப்பு கதவுகளின் செயல்பாடு, பயணிகளுக்கான தகவல், காட்சி அமைப்புகளுடனும் ஒருங்கிணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Hitachi Rail
ADVERTISEMENT
ADVERTISEMENT