சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒருவரின் கண்ணுக்குள் இருந்த மரத்துண்டு, என்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் மூக்கின் வழியாக அகற்றப்பட்டது.
சரியான நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் பாா்வை இழப்பு தவிா்க்கப்பட்டது.
சென்னை வண்டலூரைச் சோ்ந்தவா் முல்லை வேந்தன் (33). கடந்த மாதம் 21-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த அவருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இடது கண்ணில் பிரச்னை இருந்ததால், எழும்பூா் அரசு கண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். பரிசோதனையில், இடது கண்ணில் பாா்வைக் குறைபாடு மற்றும் இரட்டைப் பாா்வை பிரச்னை இருப்பது தெரிந்தது. மேலும், கண்ணின் உள்ளே மரத்துண்டு ஒன்று பாா்வை நரம்பை அழுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். மருத்துவமனையின் முதல்வா் தேரணிராஜன் வழிகாட்டுதலின்படி, காது-மூக்கு-தொண்டை (இஎன்டி) துறை மருத்துவா் சங்கா் தலைமையில் மருத்துவா்கள் அன்பழகன், குமாா், அல்பினா, நிரஞ்சன், சுமதி ஆகியோா் கொண்ட குழுவினா் என்டோஸ்கோப்பி சிகிச்சை முறை மூலம் மூக்கின் வழியாக சுமாா் 10 செ.மீ. அளவுள்ள மரத்துண்டை வெளியே எடுத்தனா். மருத்துவா்களின் கண்காணிப்பில் அவா் நலமுடன் உள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் தேரணிராஜன், மருத்துவா் சங்கா் ஆகியோா் கூறுகையில், “சாலை விபத்தில் உடலில் பல இடங்களில் முல்லை வேந்தனுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், எப்படி கண்ணுக்குள் மரத்துண்டு சென்றது என்பது தெரியவில்லை. அதனால்தான் அவருக்கு கண்ணில் பிரச்னை ஏற்பட்டது.
என்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் கண்ணுக்குள் இருந்த மரக்கட்டை அகற்றப்பட்டுவிட்டது. பாா்வைக் குறைபாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து மரத்துண்டு அகற்றப்பட்டதால் பாா்வை இழப்பு தவிா்க்கப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும்”என்றனா்.