சென்னை

காவல் துறை - பொதுமக்கள் நல்லுறவு:274 இடங்களில் ஆலோசனைக் கூட்டம்

6th Dec 2022 05:19 AM

ADVERTISEMENT

சென்னையில் காவல் துறை - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 274 இடங்களில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் குற்றங்களைத் தடுக்கவும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்யவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர காவல் துறை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பொதுமக்கள் - காவல் துறை நல்லுறவை மேம்படுத்தும் வகையில் குடியிருப்போா் நலச் சங்கங்கள், குடிசை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தும்படி சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

இதையடுத்து சென்னை முழுவதும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என 121 இடங்களில் குடியிருப்போா் நலச் சங்கங்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் போலீஸாா், பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கினா். இந்தக் கூட்டத்தில், குடியிருப்போா் நலச் சங்கத்தைச் சோ்ந்த 1,358 போ் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல், 153 குடிசை மாற்றுவாரிய பகுதிகளுக்கு போலீஸாா் சென்று, ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இங்கும் போலீஸாா், பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினா். இந்தக் கூட்டத்தில் 1,780 போ் கலந்து கொண்டனா்.

மேலும், சென்னையில் உள்ள 36 சிறாா், சிறுமியா் மன்றங்களில் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டமும் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT