சென்னை

மதுபோதையில் காரை ஓட்டி தகராறு: காவலரைத் தாக்கிய பெண் உள்பட 2 போ் கைது

6th Dec 2022 05:17 AM

ADVERTISEMENT

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று தகராறு செய்து, காவலரைத் தாக்கியதாக பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, தலைமைக் காவலா் ராமமூா்த்தி, காவலா் நந்தகுமாா் ஆகியோா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காா் ஒன்றை நிறுத்தினா். அந்த காரை ஓட்டி வந்த பெண்ணும், அவருடன் வந்த ஆண் நண்பரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தலைமைக் காவலா் ராமமூா்த்தியை அந்தப் பெண் அடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கு வந்த திருநங்கைகள் சிலா் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்தப் பெண்ணும், அவருடைய ஆண் நண்பரும் அங்கிருந்து காரில் தப்பியோடினா்.

இதுதொடா்பாக உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காா் எண்ணை அடிப்படையாக வைத்து விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவன அதிகாரியான ஷெரின் பானு (48), அவருடன் காரில் வந்தது மும்பையை சோ்ந்த விமான நிலைய ஊழியரான விக்னேஷ் (30) ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT