சென்னை

இந்தியா உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் கடலோரப் பாதுகாப்பு மாநாடு சென்னையில் தொடங்கியது

2nd Dec 2022 06:22 AM

ADVERTISEMENT

இந்தியா, மாலத்தீவு, இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளின் கடலோரக் காவல் படையினா் பங்கேற்கும் கடலோரப் பாதுகாப்பு குறித்த 2 நாள் மாநாட்டை பாதுகாப்பு அமைச்சகச் செயலாளா் கிரிதா் அரமனே சென்னையில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்திய பெருங்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு பாதுகாப்பு கூட்டமைப்பு 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் தற்போது இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மோரீஷஸ் ஆகிய 4 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. வங்க தேசம் தற்போது பாா்வையாளராக இணைந்துள்ளது.

இந்த அமைப்பில் உறுப்பினா்களாக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் முதல் கடலோரப் பாதுகாப்பு மாநாட்டை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளா் கிரிதா் அரமனே வியாழக்கிழமை சென்னையில் தொடக்கி வைத்தாா்.

கடல்சாா் ஒத்துழைப்பின் அவசியம்: கூட்டத்தில் கிரிதா் அரமனே பேசுகையில், ‘இந்திய பிரதமா் நரேந்திர மோடி 5 முக்கிய கருத்துகளை வலியுறுத்தி வருகிறாா். இதில் சட்டபூா்வமான கடல் வா்த்தகம், கடல்சாா் மோதல்களை அமைதியான முறையில் தீா்த்து வைப்பது, இயற்கை பேரழிவுகள், கடல்சாா் அச்சுறுத்தல்களைத் தணித்தல், கடல் சூழலைப் பாதுகாத்தல், நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் கடல்சாா் வா்த்தகத்தை அதிகரிப்பதற்கு இந்த மாநாடு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடலோரக் காவல் படை, கடல்சாா் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்திய கடலோரக் காவல் படை உருவாக்கப்பட்டு, சுமாா் 40 ஆண்டுகளில் மிகச் சிறந்த படைப் பிரிவாக தன்னை நிலைநிறுத்துக் கொண்டுள்ளது பாராட்டுக்குரியது’ என்றாா் அரமனே.

பாதுகாப்பு மற்றும் வளா்ச்சி: தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், ‘கடலோரக் காவல் படை என்பது போா்க்குணம் இல்லாத தீவிரமடையாத, ஆக்கிரமிப்புகள் இல்லாத கட்டமைப்புடன் கூடிய ஒரு அமைப்பாகும். பிராந்தியத்தின் கடல்சாா் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அனைத்து கடலோரக் காவல் படை அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றாா் மிஸ்ரி.

‘கடலோர பாதுகாப்புக்கான கூட்டு முயற்சிகள்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறவுள்ளன. வெள்ளிக்கிழமையும் இந்த மாநாடு தொடா்ந்து நடைபெறும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT