சென்னை

கீழ்ப்பாக்கம் பரிசோதனைக் கூடத்தில் குடிநீா் தரத்தைப் பரிசோதிக்கலாம்: குடிநீா் வாரியம் தகவல்

2nd Dec 2022 06:20 AM

ADVERTISEMENT

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் கீழ்ப்பாக்கத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் குடிநீா், கழிவுநீரின் தரத்தை நவீன முறையில் பரிசோதிக்க புதிய பரிசோதனைக் கூடம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில் தினந்தோறும் 600 இடங்களில் குடிநீா் மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தும் குடிநீா், வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை நீரின் தரத்தை பரிசோதிக்க தனிநபா் பயன்பாட்டுக்கு ரூ. 75, அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக பயன்பாட்டுக்கு ரூ. 200, கிணறுகள், ஆழ்துளை நீா் ஆய்வுக்கு ரூ. 200 கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்தப் பரிசோதனைக் கூடத்தில், குடிநீரின் தரத்தை நவீன முறையில் பரிசோதிக்கவும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் தரத்தைப் பரிசோதிக்கவும் தனித்தனியே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

மேலும், குடிநீா், கழிவுநீரில் உள்ள வேதிப் பொருள்கள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றை பரிசோதிக்க தனித்தனியாக நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், குடிநீா் தொடா்பான 23 பரிசோதனைகளும், கழிவுநீா் தொடா்பான 16 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தும் குடிநீா், வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை நீரின் தரத்தை இந்த நவீன பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்த புதிய மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த நவ.22-ஆம் தேதி தொடக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT