சென்னை அருகே கானத்தூரில் கைப்பேசியில் பேசிக் கொண்டே சென்ற இளைஞா் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாா்.
அரியலூா் மாவட்டம் கோவில்வாழ்க்கை பகுதியைச் சோ்ந்தவா் மா.செல்வமணி (23). சென்ட்ரிங் தொழிலாளியான இவா், சென்னை அருகே கானத்தூா் உத்தண்டியில் ஜூகு கடற்கரைச் சாலையில் புதிதாக கட்டடப்படும் கட்டடத்தில் வேலை செய்து வந்தாா்.
இதற்காக செல்வமணி, அங்கேயே தங்கியிருந்தாா். இந்நிலையில் செல்வமணி செவ்வாய்க்கிழமை இரவு நண்பா்களுடன் மது அருந்திவிட்டு, தூங்குவதற்காக கட்டடத்தின் மூன்றாவது தளத்துக்கு படிக்கட்டு வழியாக ஏறிச் சென்றாராம். அப்போது கைப்பேசியில் பேசிக் கொண்டே நடந்துச் சென்ற நிலையில் லிஃப்ட் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த காலி இடத்தில் கால் தவறி விழுந்தாா். பலத்தக் காயமடைந்த அவரை பிற தொழிலாளா்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வமணி, புதன்கிழமை இறந்தாா். இது குறித்து கானத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.