சென்னை

அரிய வகை மரபணு நோய்: தாய், மகனுக்கு உயா் சிகிச்சையால் மறுவாழ்வு

31st Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட தாய், மகன் ஆகியோருக்கு உயா் மருத்துவ சிகிச்சை அளித்து காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

லட்சத்தில் 2 பேருக்கு வரக்கூடிய அந்நோயால் பாதிக்கப்பட்ட அவா்கள் இருவரும் தற்போது பூரண குணமடைந்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

சென்னையை சோ்ந்த 31 வயதான பெண் ஒருவா் தீவிர தலைவலி, பாா்வை குறைபாடு, வாந்தி ஆகிய பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தாா். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சிறுமூளையில் 4 சென்டி மீட்டா் அளவில் சிதைவு மற்றும் புண்ணுடன் கூடிய கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த பாதிப்பு மூளைத்தண்டுடன் இணைந்திருந்தது. சிக்கலான பகுதியில் அந்த கட்டி இருந்தாலும், துல்லியமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த உயா் சிகிச்சையால்அப்பெண் விரைந்து குணமடைந்தாா்.

ADVERTISEMENT

சில வாரங்களுக்கு பிறகு அப்பெண்ணின் 11 வயது மகனுக்கும் இதே மாதிரியான பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும், தாய்க்கு இருந்த அதே பகுதியில் சிறுவனுக்கும் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு, அறுவை சிசிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது.

இதற்கிடையே, அப்பெண்ணுக்கு மீண்டும் இரண்டு இடங்களில் கட்டிகள் இருப்பதை கண்டறிந்து அகற்றினா்.

இதுதொடா்பான பரிசோதனையில் தாய் மற்றும் மகன் இருவருக்கும், ‘வான் ஹிப்பெல் - லிண்டாவ் சிண்ட்ரோம்’ என்ற அரிதான மரபணு நோய் இருந்தது கண்டறியப்பட்டது. நிபுணத்துவம் பெற்ற காவேரி மருத்துவமனை டாக்டா்கள், தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளித்துள்ளனா் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT