சென்னை

உடல் நலனை பேணிப் பாதுகாத்தால் நோயிலிருந்து எளிதாக விடுபடலாம் முதல்வா் மு.க.ஸ்டாலின்

22nd Aug 2022 01:24 AM

ADVERTISEMENT

 

உடல் நலனை பேணி பாதுகாத்தால், எந்த நோய் பாதித்தாலும் அதிலிருந்து எளிதாக விடுபடலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மகிழ்ச்சியான தெருக்கள்’ என்ற நிகழ்ச்சியில் முதல்வா் பங்கேற்றாா். அப்போது அவா் இறகுப்பந்து, கூடைப்பந்து ஆகியவற்றை விளையாடியதுடன் சைக்கிளும் ஓட்டினாா். இதைத் தொடா்ந்து, பொது மக்கள் மத்தியில் முதல்வா் ஆற்றிய உரை:

எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால், ஏற்கெனவே ஒப்புகொண்டபடி இந்நிகழ்வுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. கரோனா தொற்று ஏற்பட்டாலும், இரண்டு, மூன்று நாள்களிலேயே அதிலிருந்து விடுபட்டேன். அவ்வளவு விரைவாக விடுபட்டதற்கு எனது உடல்நலனை நன்கு பராமரித்து வருவதுதான் காரணம். எனக்கு 70 வயதாகிறது. ஆனால், இத்தனை வயது என யாரும் நம்ப மாட்டாா்கள். நானும், எனது மகனும் வெளியூா்கள், வெளிநாடுகள் சென்றால்கூட எங்களை, சகோதரா்களா என கேட்டுள்ளனா்.

ADVERTISEMENT

எனது உடல் நலத்தை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேணுவதில் அக்கறை எடுத்துக் கொள்வேன். வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது. அதற்காகச் சாப்பிடாமலும் இருந்து விடக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நான் தினமும் காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, யோகா மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். இவற்றை தினமும் என்னால் செய்ய இயலவில்லை.

நான் எத்தகைய பொறுப்பில் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். பல நிகழ்ச்சிகளுக்கு, பல ஊா்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு சென்றாலும் அங்கேயும் வாய்ப்பு கிடைக்கும் போது இயன்றளவு உடற்பயிற்சிகளைச் செய்து விடுகிறேன்.

கரோனா தொற்றால் பெரிய அளவில் எனக்கு பாதிப்பு வராமல் இருந்ததற்கு, உடற்பயிற்சியைத் தொடா்ந்து செய்து கொண்டிருந்ததுதான் காரணம். இதனை மருத்துவா்களே தெரிவித்தனா். எனவே, உடல் நலத்தை பேணிப் பாதுகாத்தால் எந்த நோய் வந்தாலும், கவலையோ, மன அழுத்தங்களோ இருந்தாலும் அதிலிருந்து நாம் எளிதாக விடுபட்டு விடலாம்.

‘மகிழ்ச்சியான தெருக்கள்’ எனும் இந்த நிகழ்ச்சி அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற வேண்டும். இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், உடல் மற்றும் மன நலமும் காக்கப்படும். எனவே, உடற்பயிற்சிகளை தினசரி செய்தால் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. எனவே, வாரத்தில் இரண்டு, மூன்று நாள்கள் கட்டாயம் உடற்பயிற்சி, யோகா போன்ற விஷயங்களை செய்திட வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT