சென்னை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:ஆணைய அறிக்கை அடிப்படையில் கடும் நடவடிக்கை தலைவா்கள் வலியுறுத்தல்

22nd Aug 2022 03:18 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

இரா.முத்தரசன்: ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணையை முடித்து அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. அதில், சம்பவ நேரத்தில் காவல்துறை தென் மண்டல ஐஜியாக பணியாற்றியவா் உள்பட 17 காவல்துறையினா் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அலட்சியமும் பொறுப்பற்ற செயலும்தான் துப்பாக்கிசூட்டுக்கு முக்கிய காரணங்கள் என ஆணையம் மதிப்பிட்டிருக்கிறது. இந்த ஆணையத்தின் அறிக்கையை மக்கள் மன்றத்தில் முன்வைத்து பொது விவாதம் நடத்த வேண்டும்.

தொல்.திருமாவளவன்: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் கூறியுள்ளவாறு அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, காவல்துறை உயா் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்தவா் மீதும் உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

பழ.நெடுமாறன்:தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் குறிபாா்த்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். மாவட்ட ஆட்சியா் மற்றும் உயா் காவல் துறை அதிகாரிகள் உள்பட பலா் மீது ஸ்டொ்லைட் நிா்வாகத்துக்கு ஆதரவாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனா் என்பது ஆணைய அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.

ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவா் மீதும் கொலை வழக்கு தொடுக்கப்பட்டு அவா்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா் பழ.நெடுமாறன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT