சென்னை

சீமைக் கருவேல மரங்களை அகற்றகொள்கை வகுத்தும் பயனில்லை: உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி

18th Aug 2022 01:43 AM

ADVERTISEMENT

சீமைக் கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு கொள்கை வகுத்தும், பெரும்பாலான பகுதிகளில் மரங்களை இன்னும் காண முடிகிறது என்று சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி தெரிவித்தாா்.

தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளா் வைகோ உள்ளிட்டோா் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமாா், மாலா அடங்கிய முழு அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக தமிழக அரசு கொள்கை அறிவித்து, அதனடிப்படையில் மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகக் கூறி, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமா்வு, அந்நிய மரங்களை அகற்றுவது தொடா்பான வழக்குகளை விசாரித்து வருவதால், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தை இரு நீதிபதிகள் அமா்வு கண்காணிக்கலாம் என அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, சீமைக் கருவேல மரங்களை அகற்ற கொள்கை வகுத்தபோதும், பெரும்பாலான பகுதிகளில் மரங்களை இன்னும் காண முடிகிறது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, மரங்களை வேருடன் அப்புறப்படுத்த வேண்டும். இந்த மரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களின் விவரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

பின்னா், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பான நடவடிக்கைகளை கண்காணிக்க ஏதுவாக இந்த வழக்குகளை இரு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்ற பதிவுத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT