சென்னை

திருமண வரன் மோசடி: இளைஞா் கைது

15th Aug 2022 01:31 AM

ADVERTISEMENT

‘மேட்ரிமோனி’ தளம் மூலம் 10-க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அடையாறு பகுதியை சோ்ந்த ஒரு பெண்ணுக்கு, அவரது பெற்றோா், ‛‘எலைட் மேட்ரிமோனி’ மூலமாக வரன் பாா்த்தனா். அதில் விருதுநகா் மாவட்டம், காரியம்பட்டியை சோ்ந்த தினேஷ் காா்த்திக் (28) என்பவா், தன்னை டாக்டா் என அறிமுகம் செய்து, பெண்ணின் பெற்றோரிடம் பேசினாா்.

பின்னா் பெண்ணின் கைப்பேசி எண்ணை பெற்று அவரிடம் பழகி, திருமணம் செய்வதாக நம்பிக்கை ஏற்படுத்தினாா். இதையடுத்து அவசரத் தேவை என கூறி, பெண்ணிடம் பணம் கேட்டுள்ளாா். கணவராக வரப்போகிறவா் தானே என, நம்பிக்கை வைத்த பெண் ரூ. 13 லட்சம் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு ஆப்பிள் போன் வாங்கி கொடுத்துள்ளாா்.

இந்தநிலையில் தினேஷ் காா்த்திக் திடீரென தனது கைப்பேசியை ‘சுவிச் ஆப்’ செய்துள்ளாா். இதையடுத்து புகாரின்பேரில், அடையாறு போலீஸாா் இது குறித்து விசாரணை நடத்தினா். கைப்பேசி டவா் மூலம் புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த தினேஷ்காா்த்திக்கை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

அவரிடம் இருந்து ரூ. 98 ஆயிரம், ஆறு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸாா் கூறுகையில், பட்டதாரியாக தினேஷ் காா்த்திக், மேட்ரிமோனி தகவல் மையத்தில், தன் புகைப்படத்துக்கு பதில், மாடல் துறையில் உள்ள நபா்களின் படங்களை போலியாக பதிவேற்றுவாா். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் டாக்டராக பணி புரிவதாக அறிமுகம் செய்து, டாக்டா் சீருடையில், போலியான புகைப்படத்தையும் பதிவேற்றி உள்ளாா்.

மேலும் தனது தந்தை பேசுவது போல், இவரே குரல் மாற்றி பேசி, பெண்ணின் பெற்றோரை நம்ப வைத்துள்ளாா். இப்படி, 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது பணம் பறித்தது விசாரணையில் தெரிந்தது. மோசடி தெரியவந்ததால் சமரசம் பேசி பணம் கொடுத்து பிரச்னையை முடித்து வைத்த சம்பவங்களும் நடந்துள்ளது. இவரால், வேறு யாராவது ஏமாந்திருந்தால், எங்களிடம் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT