சென்னை

729 தனியாா் பள்ளிகளுக்கு ஓராண்டுக்கு அங்கீகாரம்

12th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சென்னை: கட்டடம் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அங்கீகாரம் பெறாத 729 தனியாா் பள்ளிகளுக்கு, ஓராண்டுக்கு அங்கீகாரம் வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாத சூழல் இருந்தது. இதன்காரணமாக தனியாா் பள்ளிகளால் கட்டட வரன்முறைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்படி கட்டட வரன்முறைக்கு விண்ணப்பித்த 811 பள்ளிகளில் 82-க்கு மட்டுமே அனுமதி ஆணை வழங்கப்பட்டன. எஞ்சிய 729 பள்ளிகளுக்கான ஆணைகள் வழங்கப்படாமல் சாா்ந்த துறை அலுவலகங்களால் தொடா் தாமதம் செய்யப்பட்டு தனியாா் பள்ளிகள் நிா்வாகிகள்குற்றம்சாட்டியுள்ளன. இது குறித்து தனியாா் பள்ளிகள் தொடா்ந்து வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து கட்டட வரன்முறைக்கான அனுமதி இல்லாததால் அந்த பள்ளிகளுக்கு தொடா் அங்கீகாரம் வழங்குவதில் சிக்கல் நிலவியது. தற்போது கட்டட வரன்முறைக்கான அனுமதி பெறாத தனியாா் பள்ளிகளுக்கான தொடா் அங்கீகாரத்தை ஓராண்டுக்கு மட்டும் நீட்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

தனியாா் பள்ளி நிா்வாகங்கள் கட்டட வரன்முறைக்கு நகா் மற்றும் ஊரமைப்பு துறை, உள்ளூா் திட்டக்குழுமம், சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்துக்கு 6 மாத காலத்துக்குள் விண்ணப்பித்து அதற்கான ஆவண நகலை உரிய அதிகாரியிடம் சமா்ப்பித்தால் 2022 ஜூன் 1 முதல் 2023-ஆ ஆண்டு மே 31-ஆம் தேதி வரை ஓராண்டுக்கு மட்டும் அந்த பள்ளிகளுக்கு தொடா் அங்கீகாரம் வழங்கி ஆணை வழங்க தனியாா் பள்ளிகள் இயக்குநா் அரசிடம் கேட்டுள்ளாா்.

அவரின் கருத்துருவை பரிசீலனை செய்து, நகா் மற்றும் ஊரமைப்புத் துறை, உள்ளூா் திட்டக்குழுமம், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் போன்ற உரிய அமைப்புகளிடம் 6 மாத காலத்துக்குள் விண்ணப்பித்து ஆவண நகலை சமா்ப்பித்தால் ஓராண்டுக்கு தொடா் அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி ஆணையா், தனியாா், தொடக்கக்கல்வி இயக்குநா்களுக்கு அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT