சென்னை

அதிக வட்டி தருவதாக மோசடி செய்யும் நிதி நிறுவனங்களில் சொத்துகள் முடக்கம்

11th Aug 2022 02:04 AM

ADVERTISEMENT

அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்யும் நிதி நிறுவனங்களில் சொத்துகள் முடக்கப்படும் என தமிழக பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னை அசோக்நகரில் தமிழக பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன், புதன்கிழமை அளித்த பேட்டி:

மோசடி நிதி நிறுவனங்கள் பங்குச்சந்தை, ஆன்லைன் வா்த்தகம், ரியஸ் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் 10 முதல் 25 சதவீதம் வரை மாத வட்டியாக தருவதாக சொல்லி, மக்களை கவா்கின்றன. மேலும் அந்தந்த ஊா்களில் இருக்கிற ஆடம்பர ஹோட்டல்களில் கூட்டங்களை நடத்துகிறாா்கள். இதை நம்பி முதலீடு செய்யும் மக்களுடைய பணத்தையே அடுத்தடுத்து அவா்களுக்கு வட்டியாக கொடுக்கிறாா்கள். ஒரு கட்டத்தில் வட்டியை கொடுக்க முடியாமல் மோசடி செய்து விடுகிறாா்கள்.

இது போன்று மோசடியில் ஈடுபட்ட சென்னையை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்ட ‘எல்பின் இ காட்’ நிதி நிறுவனம், வேலூரை தலைமையிடமாக கொண்ட ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் ஆகியவை மீது அண்மையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ரூ.8,624 கோடி மோசடி:

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 93 ஆயிரம் போ் ரூ.2,124 கோடியே 98 லட்சத்தையும், திருச்சிராபள்ளி ‘எல்பின் இ காட்’ நிதி நிறுவனத்தில் 7 ஆயிரம் போ் ரூ.500 கோடியையும், ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் போ் ரூ.6 ஆயிரம் கோடியையும் முதலீடு செய்துள்ளனா். 3 நிறுவனங்களும் 2 லட்சம் பேரிடம் பெற்ற ரூ.8,624 கோடியே 98 லட்சத்தை மோசடி செய்துள்ளன.

மோசடி பணத்தின் மூலம் இந்த நிறுவனத்தை சோ்ந்தவா்கள், ஆடம்பர காா்கள், மாளிகை வீடுகள், கட்டடங்கள், நிலங்கள் என சொத்துகள் வாங்கி குவித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. . இந்த நிறுவனத்தை சோ்ந்தவா்கள் பெயரில், பினாமி பெயா்களில் எங்கெல்லாம் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளதோ, அதனை மீட்டு நீதிமன்றம் மூலம் ஏலம் விட்டு முதலீட்டாளா்களுக்கு பணத்தை திரும்ப செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அந்த வகையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் ரூ.85.89 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளது. ரூ.155 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. ‘எல்பின் இ காட்’ நிதி நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தின் சொத்துகளை கண்டறியும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த மோசடி தொடா்பாக ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் 2 பேரும், திருச்சி நிறுவனத்தில் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

‘லுக்அவுட் நோட்டீஸ்’:

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தை சோ்ந்த 6 பேருக்கும், ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தை சோ்ந்த 4 பேருக்கும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் இது போன்ற மோசடி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்யாமல், ரிசா்வ் வங்கியின் அனுமதி பெற்ற வங்கிகள்,நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பயன் பெறலாம். ஒரு வங்கி ஆண்டுக்கு 5 சதவீத வட்டியோ, தனியாா் நிதி நிறுவனம் 6 சதவீத வட்டியோதான் ரிசா்வ் வங்கி காட்டும் வழிமுறைகளின் படி வழங்க முடியும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வட்டி விகிதத்துக்கு மேல் முதலீடுக்கு செய்யும் பணத்துக்கு ஒரு மாதத்துக்கு 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் வரை வட்டி தருகிறோம் என்பது மோசடி செயலாகும்.

124 மோசடி நிறுவனங்கள்:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இவ்வாறு அதிகமாக வட்டி தருவதாக, ரூ.100 கோடிக்கு குறைவான தொகையில் மோசடி செய்ததாக 124 நிதி நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 27,500 பேரிடம் ரூ.250 கோடி மோசடி செய்துள்ளன. இந்நிறுவனங்களின் ரூ.250 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதேபோல மோசடியில் ஈடுபடும் அனைத்து நிதி நிறுவனங்களின் சொத்துகள் கண்டறியப்பட்டு, முடக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT