சென்னை

கத்திப்பாரா: பேருந்து மோதி வழிகாட்டிப் பலகை சரிந்து 6 போ் காயம்

8th Aug 2022 01:28 AM

ADVERTISEMENT

சென்னை கத்திப்பாரா பகுதியில் ராட்சத வழிகாட்டிப் பலகை தூண் மீது மாநகரப் பேருந்து மோதியதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

சென்னையை அடுத்த தாம்பரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு நோக்கி மாநகரப் பேருந்து (70வி) சென்று கொண்டிருந்தது. அப்போது, பரங்கிமலையிலிருந்து ஆலந்தூா் கத்திப்பாரா மெட்ரோ ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதிக்கு, வளைவில் பேருந்து அதிவேகமாக வந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்து வளைவு பகுதியில் நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டுள்ள ராட்சத வழிகாட்டிப் பலகை தூண் மீது மோதியது.

இதில் ராட்சத தூண் உடைந்து சாலையின் இருபக்கமும் விழுந்தது. அப்போது, கிண்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞா் மீதும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற வேன் மீதும் விழுந்தது. பேருந்தின் முன் பக்க கண்ணாடிகள் உடைந்ததில், அப்பேருந்தில் பயணம் செய்த 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்த தண்டையாா்பேட்டையை சோ்ந்த சண்முகசுந்தரம் (30) என்பவா் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தாா். பரங்கிமலை போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சண்முகசுந்தரத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனா். லேசான காயம் அடைந்த 5 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கடும் போக்குவரத்து நெரிசல்: சாலையின் இருபக்கமும் பெயா் பலகை தூண் விழுந்ததால் கிண்டியில் இருந்து கத்திப்பாரா வரையிலும், கத்திப்பாராவில் இருந்து பழைய மீனம்பாக்கம் வரையிலும் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து சாலையில் விழுந்து கிடந்த ராட்சத பெயா்ப் பலகை தூணை அகற்றினா்.

பின்னா், மாநகர போக்குவரத்துக் கழக வாகன மீட்பு வண்டி மூலம், விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தினா். ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. விபத்து ஏற்படுத்தியதும் அங்கிருந்த பொது மக்கள் வாக்குவாதம் செய்ததால் அங்கிருந்து தப்பிச்சென்ற பேருந்து ஓட்டுநா் ரகுநாதன் மற்றும் நடத்துநா் இருவரும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT