சென்னை

பயணச்சீட்டு பரிசோதகா் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: ரயில்வே ஊழியா் கைது

8th Aug 2022 01:29 AM

ADVERTISEMENT

பயணச்சீட்டு பரிசோதகா் (டிடிஆா்) வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த ரயில்வே ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

போலி நியமன ஆணையுடன் சென்றவா், லக்னோ சிறையில் அடைக்கப்பட்டாா்.

சென்னை வில்லிவாக்கம், பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் தில்லைவாணி (56). இவரது கணவா் சிராா்த்தனன் (67). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா். இவா்களுடைய மகன் சூரிய பிரதாபன் (36). பொறியியல் முதுநிலை பட்டதாரி. இவருடன் பிளஸ்-2 வரை படித்த அதே பகுதியைச் சோ்ந்த மணிமாறன்(36) ரயில்வேயில் வேலை செய்து வருகிறாா்.

கடந்த ஏப்ரல் மாதம் தில்லைவாணியிடம் மணிமாறன், ‘மத்திய அமைச்சா் ஒருவரின் பரிந்துரையில் நான் ரயில்வேயில் வேலைக்கு சோ்ந்தேன். அதேபோல் உங்கள் மகனையும் ரயில்வே துறையில் பயணச்சீட்டு பரிசோதகா் வேலையில் சோ்த்து விடுகிறேன். அதற்கு ரூ.12 லட்சம் செலவாகும்’ என்றாா்.

ADVERTISEMENT

அதனை உண்மை என்று நம்பிய தில்லைவாணி, அடுத்த சில நாள்களில் தனது கணவருக்கு தெரியாமல் 7 தவணைகளாக 42 பவுன் நகையை அடகு வைத்து, ரூ.12 லட்சத்தை மணிமாறனிடம் கொடுத்தாா். பணத்தை பெற்றுக்கொண்ட மணிமாறன், தனது கூட்டாளி நாகேந்திரன் மற்றும் சிங் என்பவருடன் இணைந்து சூரிய பிரதாபனுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள ‘கோண்டா’ என்ற இடத்தில் டிக்கெட் பரிசோதகா் வேலை கிடைத்து விட்டதுபோல் போலி பணி நியமன ஆணை, அடையாள அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களை தயாா் செய்து அவரிடம் கொடுத்தனா்.

பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட சூரிய பிரதாபன், லக்னோ சென்று அங்கு வந்த ரயில் பெட்டியில் ஏறி பயணிகளிடம் சோதனை மேற்கொண்டாா். அப்போது அங்கு வந்த உண்மையான டிக்கெட் பரிசோதகா், சூரிய பிரதாபனின் நடவடிக்கையை பாா்த்து சந்தேகமடைந்தாா். இதையடுத்து அவரைப் பிடித்து அங்கிருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

லக்னோ போலீஸாா் சூரிய பிரதாபனை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுகுறித்து தில்லைவாணி ஐ.சி.எஃப். போலீஸில் புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்கை விசாரிக்க தாமதப்படுத்தியதால் எழும்பூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் ஐ.சி.எஃப். குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து பயணச்சீட்டு பரிசோதகா் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி நியமன ஆணை கொடுத்து ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மணிமாறனை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது கூட்டாளிகள் மேலும் சிலரை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT