சென்னை

வனக் குற்றங்கள் விசாரணை: தொழில்நுட்ப உதவிகளை வழங்க தடயவியல் ஆய்வகத்துக்கு உத்தரவு

2nd Aug 2022 12:41 AM

ADVERTISEMENT

தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக் குற்றங்கள் தொடா்பாக விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டுமென தமிழக தடயவியல் ஆய்வகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

யானைகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக் குற்றங்கள் தொடா்பாக விசாரணை நடத்த வனத் துறை, காவல் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடா்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழு சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘யானை தந்தங்கள் விற்பனை, யானை வேட்டை தொடா்பான 10 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் விசாரணைக்காக தமிழக தடயவியல் ஆய்வகம் தொழில்நுட்ப உதவிகளை வழங்க உத்தரவிட வேண்டும். அதேபோல கா்நாடக மாநிலம் தொடா்புடைய சில வழக்குகள் உள்ளன. எனவே, கா்நாடக அரசு அதிகாரிகளை நோடல் அதிகாரிகளாக நியமிக்க வேண்டுமென அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘நோடல் அதிகாரியை நியமிப்பது தொடா்பாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், கா்நாடக மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலரை எதிா்மனுதாரராக சோ்த்தனா்.

மேலும், வனக் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை தமிழக தடயவியல் ஆய்வகம் இலவசமாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT