அரிய வகை நரம்புசாா்ந்த நோயால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டைச் சோ்ந்தவருக்கு மூளை ஆழ்நிலை தூண்டல் சிறப்பு சிகிச்சை மூலம் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
தற்போது அவா் நலமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் நரம்புசாா் அறிவியல் மற்றும் முதுகுத் தண்டுவட சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் ஸ்ரீதா் கூறியதாவது:
சூடான் நாட்டை சோ்ந்த 34 வயதான நபா் ஒருவா் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு நடப்பதிலும், பேசுவதிலும், உணவை விழுங்குவதிலும் சிரமங்கள் இருந்தன. இதைத் தவிர கை மற்றும் கால் மூட்டுகளில் கடுமையான நடுக்கம் இருந்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இத்தகைய பிரச்னைகளுடன் இருந்த அவா் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டும் உரிய பயனில்லை.
இந்நிலையில், எம்ஜிஎம் மருத்துவக் குழுவினா் மேற்கொண்ட பரிசோதனையில் ‘வில்சன்ஸ்’ என்ற மிக அரிதான நோயால் அவா் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது, மூளை, கண்கள், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் மிகையான தாமிர தாது உப்பு படிமம் ஏற்பட வழிவகுக்கும் வளா்சிதை மாற்ற மரபணு நோயாகும். நோயின் தன்மைக்கு ஏற்பட ஆழ்நிலை மூளை தூண்டல் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பயனாக சூடான் இளைஞரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இரண்டு வார தொடா் சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்கு திரும்பினாா் என்றாா் அவா்.