சென்னை

நடிகா் சிவகாா்த்திகேயன் வழக்கிலிருந்து நீக்கக் கோரி வருமான வரித் துறை மனு

14th Apr 2022 12:21 AM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகா் சிவகாா்த்திகேயன், ஞானவேல்ராஜா இடையேயான பிரச்னையில் வருமான வரித் துறைக்குத் தொடா்பு இல்லை என்றும், வழக்கிலிருந்து தங்களது துறையை நீக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக இந்த விவகாரத்தில் நடிகா் சிவகாா்த்திகேயன், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தான் நடித்து ஞானவேல்ராஜா தயாரித்த மிஸ்டா் லோக்கல் திரைப்படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ.11 கோடி மட்டுமே தரப்பட்டது. அந்தத் தொகைக்கு ரூ.11 கோடிக்கு டிடிஎஸ் பிடித்த அவா், அதை வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை.

அந்தத் தொகையை வருமான வரித்துறை என்னிடம் கேட்கிறது. எனவே, தரவேண்டிய தொகையை தராமல், வேறு படங்களைத் தயாரிக்க ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா். இந்த குற்றச்சாட்டை மறுத்து ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தா் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எதிா்மனுதாரராக சோ்க்கப்பட்ட வருமான வரித் துறை சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிவகாா்த்திகேயனுக்கும், ஞானவேல்ராஜாவுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கும், வருமான வரித்துறைக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. எனவே, இந்த வழக்கிலிருந்து வருமான வரித் துறையை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணையை வருகிற 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT