சென்னை

எம்.பி.பி.எஸ்.: நிரப்ப முடியாமல் 24 அரசு இடங்கள்!

14th Apr 2022 01:37 AM

ADVERTISEMENT

 

சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத எம்பிபிஎஸ் இடங்களை மத்திய சுகாதாரத் துறை, மாநிலங்களுக்கு திருப்பி வழங்காததால், நிகழாண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

மாநில மருத்துவக் கல்வி இயக்ககத்தாலும் அதனை நிரப்ப இயலாது என்பதால் அந்த இடங்கள் அனைத்தும் வீணாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

ADVERTISEMENT

தமிழகத்தைப் பொருத்தவரை புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட, மொத்தம், 37 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளிலும் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 7,825 எம்பிபிஎஸ் மற்றும் 2,060 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,742 இடங்கள் உள்ளன.

இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 886 இடங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த இடங்களுக்கான மூன்று சுற்றுக் கலந்தாய்வையும், சிறப்புக் கலந்தாய்வையும் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) அண்மையில் நடத்தியது. அதில், தமிழகத்திலிருந்து ஒதுக்கப்பட்டதில் 24 இடங்கள் நிரம்பவில்லை.

கடந்த ஆண்டுவரை அவ்வாறு நிரம்பாத இடங்களை மாநிலங்களுக்கு திருப்பி ஒப்படைக்கும் நடைமுறை இருந்தது. ஆனால், நிகழாண்டில் அந்த இடங்களை ஒப்படைக்காமல் மத்திய அரசே அதனை நிரப்பும் வகையிலான கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன் விளைவாகவே, தற்போது இத்தனை சுற்றுகள் நடத்தப்பட்டும் எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

இதனால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களில் சேரும் வாய்ப்பு 24 மாணவா்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, தனது கொள்கை முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைத்து மாநிலங்களுக்கும் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளதாக மாநில சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மற்றொரு புறம் மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்திய கலந்தாய்வில் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 4 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களும், 14 நிா்வாக இடங்களும் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப கூடுதல் அவகாசம் அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT