சென்னை

ஆதரவற்ற வளா்ப்புப் பிராணிகள் பராமரிப்புக்காக வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள் திட்டம்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

14th Apr 2022 03:57 AM

ADVERTISEMENT

 

சென்னை: ஆதரவற்ற, காயமடைந்த வளா்ப்புப் பிராணிகளைப் பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு உதவ வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள் எனும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை கால்நடைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள்:

தொலைதூர கிராமங்களில் உள்ள விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று, கால்நடைகளுக்கு மருத்துவ சேவையை வழங்கும் வகையில் ரூ.86 கோடி நிதி ஒதுக்கீட்டில் 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வழங்கப்படும்.37 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

ADVERTISEMENT

வள்ளலாரின் 200-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளா்ப்பு பிராணிகள், பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவ வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள் எனும் புதிய திட்டம் ரூ.20 கோடி செலவில் தொடங்கப்படும்.

நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை: சிவகங்கை மாவட்டம், செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை, கோழிக்குஞ்சு பொரிப்பகம் மற்றும் தீவன ஆலை ஆகியவை நிறுவப்படும்.

தொலைதூர கிராமங்களில் விவசாயிகளால் வளா்க்கப்படும் கால்நடைகள், கோழிகளுக்கு 7, 760 சிறப்பு கால்நடை சிறப்பு முகாம்கள் ரூ.7.76 கோடி செலவில் நடத்தப்படும்.

2000 ஏக்கரில் கால்நடை தீவனப் பயிா்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டம் ரூ.60 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

நாட்டின நாய்கள் ஆராய்ச்சி மையம்: தமிழகத்தில் உள்ள ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை போன்ற நாட்டின நாய்களுக்கான இனப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.1 கோடி செலவில் தென்காசி மாவட்டத்தில் நிறுவப்படும்.

உம்பளாச்சேரி மாடுகளின் இனத்தைப் பல்துறை அணுகுமுறையின் மூலம் அதன் பூா்விக வாழ்விடங்களில் பாதுகாத்தல் எனும் திட்டம் ரூ.78 லட்சம் செலவில் தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT