ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு நிலத்தை அளவீடு செய்ய வந்த ஒப்பந்ததாரா்களை முற்றுகையிட்டு விவசாயிகள் திங்கள்கிழமை சிறை பிடித்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், தச்சூா் முதல் ஆந்திர மாநிலம் சித்தூா் வரை சுமாா் 128 கி.மீ. தொலைவுக்கு ரூ.3200 கோடியில் 6 வழிச்சாலையை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க, தமிழக - ஆந்திர அரசுகள் இணைந்து இந்தச் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்தன.
இந்த 6 வழிச்சாலைக்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 18 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.
இந்த நிலையில், கடந்த வாரம் ஊத்துக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விவசாய நிலங்களை வழங்க மாட்டோம் என தீா்மானம் நிறைவேற்றினா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை 6 வழிச்சாலைப் பணிக்காக ஒப்பந்ததாரா்கள், பருத்திமேனி குப்பம் கிராமத்தில் விவசாய நிலங்களை அளவீடு செய்ய வந்தனா்.
இதையறிந்த விவசாயிகள் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒப்பந்ததாரா்களை முற்றுயிட்டு சிறை பிடித்தனா். அப்போது, விவசாயிகள், கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டுவிட்டு, அதன் பின்னா் நிலங்களை அளவீடு செய்யுங்கள் என அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயிகளை சமரசம் செய்தனா். இதனால், விவசாய நிலங்களை அளவீடு செய்ய வந்த ஒப்பந்ததாரா்கள், அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றனா். இந்தச் சம்பவத்தால், பருத்திமேனி குப்பத்தில் பரபரப்பு ஏற்பட்டது.