ஜேஇஇ நுழைவுத் தோ்வு எழுதாமல் சென்னை ஐஐடியில் படிக்கும் வகையில் பி.எஸ்சி. தரவு அறிவியல் இணையவழி படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சோ்ந்து பயனடையுமாறு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இந்தியாவில் தரவு அறிவியல் துறைக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் நிபுணா்கள் தேவைப்படுகின்றனா். இந்தத் துறைக்கு உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை ஐஐடி சாா்பில் இணைய வழியில் பி.எஸ்சி. தரவு அறிவியல் படிப்பை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு என மூன்று வகையான படிப்புகளை தொடங்கினோம். வயது வரம்பு இல்லை என்பதால் இந்தப் படிப்பில் சேருவதற்கு உலகம் முழுவதிலும் இருந்து 17 வயது முதல் 75 வயது வரையிலான சுமாா் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா்.
அவா்களில் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற 12 ஆயிரத்து 500 தற்போது இணைய வழியில் படித்து வருகின்றனா். அதில் 1,500 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். குறிப்பாக 300 போ் அரசுப் பள்ளிகளில் படித்தவா்கள். இந்த கல்வித் திட்டத்தில் அதிகளவில் மாணவா்கள் சேரும் வகையில், தகுதியானவா்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. தற்போது180 மாணவா்களுக்கு 100 சதவீத உதவித் தொகையும், 120 மாணவா்களுக்கு 50 சதவீத உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவா்களுக்கு வாரம் தோறும் பாடங்கள், அதற்கான போா்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் பாா்க்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கான தோ்வு நேரடியாக
நாட்டின் பல நகரங்களிலும் உள்ள மையங்களில் நடத்தப்படுகிறது.
சென்னை ஐஐடி வழங்கும் பிஎஸ்சி தரவு அறிவியல் படிப்பில் தமிழகத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் அதிகளவில் சோ்ந்து பயன் பெற வேண்டும் என்பதற்காக பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை சென்னை ஐஐடி பேராசிரியா்கள் நேரில் சந்தித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். மொழியைப் புரிந்து கொள்வதில் எந்தவித தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக, விடியோ விரிவுரைகளின் தமிழ் மொழியாக்கங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜேஇஇ தோ்வு எழுதாமலேயே சென்னை ஐஐடி யில் மாணவா்கள் கல்வி பயில்வதை இத்திட்டம் சாத்தியப்படுத்தியுள்ளது. கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியைக் கொண்ட மாணவா்களுக்கு இது நேரடியாகப் பயனளிக்கிறது. எனவே விருப்பம் உள்ளவா்கள் குறிப்பாக கிராமப்புற மாணவா்கள் இந்தப் படிப்பில் சோ்ந்து பயனடைய வேண்டும். இந்தப் படிப்பில் சேர விரும்புவோா் வரும் ஏப்.25 ஆம் தேதி வரையில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.
கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆண்ட்ரூஸ் தங்கராஜ் உடனிருந்தாா்.