சென்னை

கண்ணில் கருப்புத் துணி கட்டி மருத்துவா்கள் போராட்டம்

12th Apr 2022 05:27 AM

ADVERTISEMENT

கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அரசு மருத்துவா்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அப்போராட்டத்தில்100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் பெருமாள் பிள்ளை கூறியதாவது:

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, கரோனா தொற்று பரவல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனாலும், உறுதியான நடவடிக்கை மூலம் உச்சத்தில் இருந்த கரோனா தொற்றை முதல்வரின் வழிகாட்டுதலின்படி குறைத்தோம்.

ADVERTISEMENT

கரோனா மூன்று அலைகளிலும் 18,000 அரசு மருத்துவா்களும், அரசுக்கு பக்கபலமாக களத்தில் உறுதியாக நின்று ஓய்வின்றி பணியாற்றினோம். கரோனாவால் மருத்துவா்கள் உயிரிழந்த போதும், ஏராளமான மருத்துவா்களுக்கு தொற்று ஏற்பட்ட போதும், தங்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு என தெரிந்தும், ஒவ்வொரு மருத்துவரும் அா்ப்பணிப்போடு பணி செய்தோம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவா்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. அரசாணை 354-இன் படி அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

கரோனா போரில் உயிரிழந்த அரசு மருத்துவா்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT