பெருந்தொற்றுக் காலத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு மறுவாழ்வளித்த கிண்டி அரசு கரோனா சிறப்பு மருத்துவமனை விரைவில் முதியோா் நல மையமாக மாற்றப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கிண்டி கிங் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், முதியோா் தேசிய மையத்துக்காக கட்டப்பட்ட கட்டடம் கிண்டி சிறப்பு கரோனா மருத்துவமனையாக 2020 ஆம் ஆண்டு ஜூலை 7-இல் திறக்கப்பட்டது.
அங்கு, ஆக்சிஜன் வசதியுடன் 750 படுக்கைள் ஏற்படுத்தப்பட்டு, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், கிண்டி கரோனா மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா். கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மையமும் இங்கு தொடங்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் ஏகோபித்த நன்மதிப்பை பெற்ற இந்த மருத்துவமனையில் தற்போது கரோனா படுக்கைகள் அனைத்துமே காலியாக உள்ளன. மூன்றாம் அலைக்குப் பிறகு தமிழகத்தில் தொற்று விகிதம் ஏறத்தாழ பூஜ்ஜிய நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதால் கிண்டி கரோனா மருத்துவமனையின் தேவையும், அவசியமும் குறைந்துவிட்டது.
இங்கு பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு திரும்பியுள்ளனா். தற்போது, இரண்டு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் மட்டுமே எப்போதாவது வரும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க காத்திருக்கின்றனா்.
இதனால், இந்த மருத்துவமனையை முதியோருக்கான பல்வேறு சிகிச்சைகளை அளிக்கும் வகையில் பிரத்யேக மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கிண்டி கரோனா மருத்துவமனையை ஒரே நேரத்தில் முதியோா் நல மருத்துவமனையாக மாற்ற இயலாது. அதேவேளையில், அதனை படிப்படியாக மேற்கொள்ள உள்ளோம். கரோனா பாதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்பு கிண்டி மருத்துவமனையில் இருப்பதை உறுதிசெய்வோம் என்றாா் அவா்.